மழைக்காலத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடியை மீட்க நிரந்தரதீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
மழைக்காலத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடியை மீட்க நிரந்தரதீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகரம் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அரசுக்கு தூத்துக்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழை
தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவியது.
சிவப்பு எச்சரிக்கை
இதனால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது. இந்த சிவப்பு எச்சரிக்கை நேற்று மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. அதே போன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக தூத்துக்குடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பாதிக்கப்படும் பகுதிகளான முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், தனசேகர்நகர், குறிஞ்சி நகர், ராஜீவ்நகர், கதிர்வேல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் 2 அடி உயரத்துக்கு தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதே போன்று தூத்துக்குடி பிரையண்ட்நகர், சுப்பையா முதலியார்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கி நிற்கிறது.
அரசு ஆஸ்பத்திரி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் வளாகம் மட்டுமின்றி சில வார்டுகளிலும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். ஆஸ்பத்திரிக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் அறையிலும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மின்சார வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர மேலும் 3 ஜெனரேட்டர்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் மின்சாரம் தடைபடாமல் அதை வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர மாநகர பகுதியில் 177 இடங்களில் தேங்கி உள்ள மழைநீரை 187 மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி டேங்கர் லாரிகள் மூலம் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி உள்ள தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.
கோரம்பள்ளம் குளம்
தூத்துக்குடி அருகே உள்ள கயத்தாறு, ஓட்டப்பிடாரம், கடம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழைநீர் அனைத்தும் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. இதனால் கோரம்பள்ளம் குளம் நிரம்பி காணப்படுகிறது. மேலும் உபரி நீரை வெளியேற்றும் வகையில் குளத்தில் உள்ள 20 மதகுகளும் திறக்கப்பட்டன. இதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இந்த தண்ணீர் அத்திமரப்பட்டி-காலாங்கரை இடையேயான தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதே போன்று வீரநாயக்கன்தட்டு செல்லும் ரோட்டை கடந்தும் தண்ணீர் சென்றது. கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது 20 மதகுகளும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் குளத்தில் இருந்து நேற்று காலை 16 ஆயிரத்து 446 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி நேற்று காலையில் 503 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இது தவிர வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத மக்கள் 903 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
தத்தளிக்கும் ரெயில் நிலையம்
கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றும் பணிகள் நடந்தன. ஆகையால் நேற்று முன்தினம் மாலை 5.15-க்கு புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணி 22 நிமிடம் தாமதமாக நேற்று முன்தினம் இரவு 11.37 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதே போன்று தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.15 மணிக்கு பதிலாக 6 மணி 58 நிமிடங்கள் தாமதமாக நேற்று அதிகாலை 3.13 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதே நேரத்தில் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். நேற்று ரெயில் நிலையத்தில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு இருந்தது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 ரெயில்களும் வழக்கமான நேரத்தில் மீளவிட்டானில் இருந்து புறப்பட்டு சென்றன.
தூத்துக்குடி மாநகரம் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அரசுக்கு தூத்துக்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை அளவு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூர் 248 மில்லி மீட்டர், காயல்பட்டினம் 306, குலசேகரன்பட்டினம் 158, விளாத்திகுளம் 41, காடல்குடி 52 வைப்பார் 149, சூரங்குடி 56, கோவில்பட்டி 71, கழுகுமலை 36, கயத்தார் 58, கடம்பூர் 90, ஓட்டப்பிடாரம் 121, மணியாச்சி 87, வேடநத்தம் 80, கீழஅரசடி 59, எட்டயபுரம் 78.9, சாத்தான்குளம் 121, ஸ்ரீவைகுண்டம் 179, தூத்துக்குடி 266.60 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.
-------
Related Tags :
Next Story