கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்


கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 26 Nov 2021 5:36 PM IST (Updated: 26 Nov 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தனியார் நிறுவன மேற்பார்வையாளர்
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 44). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பில், நெல்லை மாவட்டம் அம்பையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஊழியர்களை அழைத்து வருவதற்காக வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
அந்த வாகனங்களை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் இரவில் ஹரி காரில் அம்பைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் தன்னுடைய நண்பர்களான மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரரான முருகன் (56), கோபால் (41), அழகர்சாமி மகன் ரகுநாதன் (26) ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார்.
மின்கம்பம் மீது கார் மோதல்
கோவில்பட்டி அருகே இடைசெவல் நாற்கர சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையோர இரும்பு மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. மோதிய வேகத்தில் மின்கம்பமும் முறிந்து காரின் மீது விழுந்தது. உயர் அழுத்த மின்கம்பிகளும் அறுந்து தொங்கின.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் காரில் இருந்த முருகன், கோபால் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரி, ரகுநாதன் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
2 பேருக்கு தீவிர சிகிச்சை
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த முருகன், கோபால் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைத்தனர்.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முருகனுக்கு கலாமணி என்ற மனைவியும், மதன் (22), பாலா (20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கோபாலுக்கு சுகந்தி என்ற மனைவியும், திவ்யா (12) என்ற மகளும் உள்ளனர்.
கோவில்பட்டி அருகே மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story