கடும் உரத்தட்டுப்பாட்டால் சாகுபடி பாதிப்பு
கடும் உரத்தட்டுப்பாட்டால் சாகுபடி பாதிப்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடும் உரத்தட்டுப்பாடு காரணமாக சகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்து வட்டு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
ஜம்புகல் கரடு மலை
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்ட அரங்கம் மாற்றப்பட்டதால் முக்கிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மனுக்களை கூட்டத்தில் பதிவு செய்து விட்டு புறக்கணிப்பு செய்தனர். கூட்டத்தில்
உடுமலை அமராவதி நகர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
உடுமலை தாலுகா ஆண்டிய கவுண்டனூர் அருகே ஜம்புகல் கரடு மலை 2500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மலையில் மண்பாங்கான இடத்தில் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் விவசாயம் செய்ய கடந்த தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு சமுதாய மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இங்கு மக்கள் விவசாயம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் தனியார் ஒருவர் மலையின் பாதையை ஆக்கிரமித்து கம்பிவேலி அமைத்து மற்றவர்கள் தங்கள் நிலத்துக்கு செல்ல முடியாதபடி செய்து விட்டனர். ஜம்புகல் மலை முழுவதையும் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி முறையற்ற வகையில் எழுதி வாங்கியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கிணறு தோண்டுவது, ஆழ்குழாய் கிணறு அமைப்பது, மரங்களை வெட்டுவது என்று தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். மீண்டும் நிலங்களை மலைவாழ் மக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
உரத்தட்டுப்பாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கடும் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்காச்சோளம், வாழை, காய்கறி பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு உரம் அவசியமாக உள்ள நிலையில் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லை என தெரிவிக்கிறார்கள். இந்தநிலையை பயன்படுத்தி தனியார் உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான உரங்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், தனியார் உர விற்பனை நிலையங்களை கண்காணித்து அரசு நிர்ணயித்த விலையில் உரம் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியுள்ளனர்.
பயிர்க்கடன் தள்ளுபடி
அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பிரநிதிகள் சார்பில் அளித்த மனுவில், மாவட்டத்தில் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 49 ஆயிரத்து 903 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்கும்.
கிராம நிர்வாக அதிகாரிகள் வழங்கிய அடங்கலில் பதியப்பட்டுள்ள பயிரை பொறுத்து கடன் தள்ளுபடி செய்துள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடங்கலில் விதிமீறல் உள்ளது என 3184 விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை என்று கூறி சான்றிதழ் வழங்காமல் உள்ளனர். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story