அமராவதிஅணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


அமராவதிஅணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2021 6:38 PM IST (Updated: 26 Nov 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

அமராவதிஅணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தளி
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை  கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.  வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை கொடுக்கிறது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை யொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில்  பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்ததுடன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 
உபரி நீர் திறப்பு 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வரையிலும் நீர்வரத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 9 கண்மதகுகளில் மூன்று மதகுகள், பிரதான கால்வாய், ஷட்டர்கள் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.அணைக்கு வந்து கொண்டு இருந்த நீர்வரத்து காலை 8 மணி அளவில் படிப்படியாக குறைந்தது.அதைத் தொடர்ந்து மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் அடைக்கப்பட்டது.
மேலும் வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது.இதை தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை உதவிப் பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர்  கண்காணித்து வருகிறார்கள்.அத்துடன் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் 9 கண் மதகுகள், ஷட்டர்கள், பிரதான கால்வாய் வழியாக கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-

Next Story