போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி


போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 26 Nov 2021 7:31 PM IST (Updated: 26 Nov 2021 7:31 PM IST)
t-max-icont-min-icon

போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

குமரலிங்கம்
குமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவ வசதி பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகிறார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையம்
குமரலிங்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம் மேம்படுத்தப்பட்ட நிலையில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 30 படுக்கை வசதிகள், மற்றும் நுண்கதிர் பிரிவு வசதியுடன் கூடிய கட்டிடமாக கட்டப்பட்டது. ஆனால் தற்போது முழுமையாக செயல்படாத நிலையிலேயே உள்ளது. 
இதற்குக்காரணம் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். 
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளேயே நாய்கள் கூட்டம் கூட்டமாக படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு அச்சமும் நிலவுகிறது. இந்தப்பகுதி என்பது கொழுமம், குமரலிங்கம், சாமராயபட்டி, மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில் விவசாய கூலிகளும், தொழிலாளிகளும் நிறைந்த பகுதியாகும். இரவு நேரங்களில் ஏதேனும் மருத்துவ உதவி தேவைபட்டால் இங்கே மருத்துவ உதவி கிடைப்பதில்லை. 
மெடிக்கலில் மருத்துவம்
இந்த மருத்துவமனைக்கு என்று ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸ் பெரும்பாலும் மருத்துவமுகாம்களுக்கு மருத்துவர்களை கூட்டி செல்லவும், மருந்துகள் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே பயன்படுகிறது. 
சில சமயங்களில் டீசலும் இருப்பதில்லை. ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் 108 ஆம்புலன்சை வரவழைத்து அனுப்பி வைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனால் காலதாமதமும், சில சமயங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது.
திடீரென ஏற்படும் நெஞ்சு வலி, காய்ச்சல், மற்றும் விபத்துகளுக்கான முதலுதவி போன்றவற்றுக்கு கூட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இந்தப் பகுதியில் உள்ள ஒரு சில மருந்துக்கடைகளில்மெடிக்கல்களில் மருந்து விற்பனையாளர்களே திடீர் மருத்துவர்களாக மாறி வைத்தியம் பார்க்கிறார்கள். மருந்துச் சீட்டு இல்லாமல் வந்தாலே மருந்து கொடுக்க கூடாது என்ற உத்தரவு இருக்கும்போது இவர்கள் ஊசி போட்டு வைத்தியம் பார்க்கிறார்கள். 
மருத்துவர்கள் நியமனம்
இவர்களைச் சார்ந்தே இந்த பகுதி மக்களின் மருத்துவம் உள்ளது. இது பாதுகாப்பான முறை இல்லை. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் என்ன செய்வது ஏதோ அவர்களால் முடிந்ததை செய்தார்கள் என்ற நிலையிலேயே மக்களின் பார்வை உள்ளது.
இது பாதுகாப்பான முறை இல்லை என்பதால் அரசு சுகாதாரத் துறையினர் உடனடியாக தலையிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்களை நியமித்து ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி சுகாதாரமான பாதுகாப்பான மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story