சயான் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்


சயான் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 26 Nov 2021 8:47 PM IST (Updated: 26 Nov 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

சயான் மனோஜ் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான் உள்பட 2 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. சயான், விபத்தில் இறந்த கனகராஜின் (ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்தினர். தொடர் விசாரணை அடிப்படையில் தடயங்களை அழித்ததாக தனபால், ரமேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

23-ந் தேதிக்கு தள்ளிவைப்பு 

இந்தநிலையில் நேற்று ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜாமீனில் உள்ள சயான், மனோஜ் ஆகிய 2 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடந்தது. 8 பேர் ஆஜராகாதது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஷாஜஹான், கனகராஜ் ஆகியோர் வழக்கு குறித்து தொடர் புலன் விசாரணை முடியாததால், கூடுதலாக கால அவகாசம் ேவண்டும் என்று நீதிபதியியிடம் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தர விட்டார்.  

இதுகுறித்து அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- 

81 பேரிடம் விசாரணை 

தனபால், ரமேஷ் ஆகிய 2 பேர் ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மனு கடந்த 10-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களை ஜாமீனில் விட்டால் விசாரணை வெகுவாக பாதிக்கும். தனபால் கோடநாடு சம்பவத்துக்கு முன்பு கனகராஜ் உடன் தொடர்பில் இருந்து உள்ளார். இந்த சதித்திட்டத்தில் அவருக்கு பெரும்பங்கு இருக்கிறது. 

சம்பவம் நடந்த பின்பு கனகராஜை காத்திருந்து தனபால் சந்தித்தார். கனகராஜ் இறந்த பின்னர் தனபால் சாட்சியங்களை அழிக்க முனைப்பு காட்டினார். கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்பு ரமேஷ் உடன் இருந்து உள்ளார். ரமேஷிடம் 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இதுவரை 81 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story