தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு செய்தார்
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு செய்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநகரில் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். அவர் தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகர், சின்னகண்ணுபுரம், மீளவிட்டான், தாளமுத்துநகர், மேல அலங்காரத்தட்டு, சிவந்தாகுளம், பிரையண்ட்நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து மழைநீரை விரைந்து அகற்ற அறிவுறுத்தினார்.
நிவாரண உதவி
தொடர்ந்து தூத்துக்குடி ராஜபாண்டிநகர், தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர், நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் திறப்பு
மணியாச்சி, செக்காரக்குடி தளவாய்புரம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த மழை, காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து நேற்று முன் தினம் நள்ளிரவில் கோரம்பள்ளம் குளத்திற்கு வர தொடங்கியது. இதனையடுத்து, கோரம்பள்ளம் குளத்திற்கு அதிக அளவு மழை தண்ணீர் வரத்து இருந்ததால் நேற்று முன்தினம் மாலையில் 3 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பின்னர் நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி, இரவில் 6 மதகுகளும், அதனை தொடர்ந்து நள்ளிரவில் 15 மதகுகளும், நேற்று அதிகாலையில் 20 மதகுகளும் திறக்கப்பட்டன.
தரைப்பாலம் மூழ்கியது
இதனால் மழைவெள்ளநீர், அத்திமரப்பட்டி காலாங்கரை இடையிலான தரைப்பாலம் முழுவதையும் மூழ்கடித்து சென்றது. இதன் காரணமாக அந்த வழியே பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். பாலத்தின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் வைத்து அடைத்தனர்.
மேலும், அத்திமரப்பட்டி கோரம்பள்ளம், காலாங்கரை, பெரியநாயகிபுரம், வீரநாயக்கன்தட்டு ஆகிய ஊர்களுக்கிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியே செல்லும் வாகனங்கள் திருச்செந்தூர் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் சுற்றி சென்றன.
உப்பாற்று ஓடையில் திறக்கப்பட்ட மழை வெள்ள நீர் அத்திமரப்பட்டி, வீரநாயக்கன்தட்டு, உப்பாற்று ஓடை பாலம், முத்துநகர், கோயில்பிள்ளைநகர், தெர்மல்நகர் வழியாக கடலில் சென்று கலக்கிறது.
கண்மாயில் ஆய்வு
இந்நிலையில், அத்திமரப்பட்டி ஊருக்கு மேற்குப் பகுதியிலுள்ள 24 மதகுகள் அமைந்துள்ள கண்மாயை நேற்று காலையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story