பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் நீலகிரி கலெக்டர் பேட்டி
பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் நீலகிரி கலெக்டர் பேட்டி
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறினார்.
கலெக்டர் பொறுப்பேற்பு
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கடந்த மாதம் கொரோனா பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றார். இதனால் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி கூடுதல் பொறுப்பாக கலெக்டர் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னசென்ட் திவ்யாவை மாற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.பி.அம்ரித் நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரசின் திட்டங்கள்
புதிய கலெக்டருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி உள்பட மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 114-வது கலெக்டராக எஸ்.பி.அம்ரித் பொறுப்பேற்று உள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரி கள் வழிகாட்டுதல்படி நீலகிரி மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான வசதிகள், அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எடுத்து செல்லப் படும்.
உடனுக்குடன் தீர்வு
நீலகிரி சூழலியல் அடிப்படிடையில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. சுற்றுலா பயணிகள், மக்கள் மற்றும் வனவிலங்குகள் வாழ தகுதியான மாவட்டமாக இருக்க வேண்டும். அதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குறைகளுக்கு தீர்வு காணப்படும். மசினகுடியில் யானை வழித்தட பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தமிழக அரசு வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற எஸ்.பி.அம்ரித் மதுரையில் கூடுதல் கலெக்டராகவும், புதுக்கோட்டையில் சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story