திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இயல்பு நிலை திரும்பியது
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த பலத்த கனமழையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரம், கிரி பிரகாரம் மற்றும் நாழிக்கிணறு கார் நிறுத்தும் இடம் போன்ற இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
கனிமொழி எம்.பி. ஆய்வு
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவில் வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தோம். மழை காலத்தில் பாதுகாப்பான இடங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கும் அவசர பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
16 இடங்களில்...
மழை காலத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் நீர் வரக்கூடிய கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் போன்றவை தூர்வாரப்பட்டு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.
திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வரலாறு காணாத மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் மட்டும் 6 மணி நேரத்தில் 30 செ.மீ. மழையும், திருச்செந்தூரில் 24 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்த அன்று 16 இடங்களிலும், இன்றைய தினம் (நேற்று) 11 இடங்களிலும் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 300 பேர் முதல் 400 பேர் வரை தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 67 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு அறிவுரை
மாவட்டத்தில் 36 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமாரதுரை, தாசில்தார் சுவாமிநாதன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் சுதாகர், எஸ்.ஏ.செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story