உர விற்பனையாளர்கள் மிரட்டுகின்றனர் என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக புகார் செய்தால் விவசாயிகளை உர விற்பனையாளர்கள் மிரட்டுகின்றனர் என்று ராமநாதபுரம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.
ராமநாதபுரம்,
கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக புகார் செய்தால் விவசாயிகளை உர விற்பனையாளர்கள் மிரட்டுகின்றனர் என்று ராமநாதபுரம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.
குறைதீர்க்கும் நாள்கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், விவசாய இணை இயக்குனர் டாம்சைலஸ், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசிய தாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் மழையை நம்பி விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம். ஆனால், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் எங்கும் கிடைப்பதில்லை. சில பகுதிகளில் மட்டும் உரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
உரம்
பெரும்பாலான பகுதிகளில் உரம் இன்றளவும் தட்டுப்பாடாகவே உள்ளது. 8 ஆயிரம் டன் தேவைப்படும் பகுதியில் இதுவரை 5 ஆயிரத்து 469 டன் மட்டுமே வாங்கி சப்ளை செய்துள்ளீர்கள். இன்னும் ஒருவாரத் திற்குதான் உரம் தேவைப்படும். அதன்பின்னர் நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் பயனில்லை. உரத்தட்டுப்பாட்டை பயன்படுத்தி வெளியில் கூடுதல் விலைக்கு உரம் விற்கின்றனர். இதனை ஆய்வு என்ற பெயரில் ஒரு சில நாட்கள் உரம் விற்க தடைவிதித்து அடுத்தநாளே கடையை திறந்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதற்கு அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதோடு உரங்கள் கையிருப்பு உள்ளது, அதிகஅளவில் வந்துள்ளது என்று அதிகாரிகள் விவசாயிகளிடம் தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். உரமின்றி விவசாயம் அழிந்தால் அதற்கு அதிகாரிகளே பொறுப்பு. மாவட்டம் முழுவதும் உரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிரட்டல்
கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் செய்தால் விவசாயிகளை உரம் விற்பனையாளர்கள் மிரட்டுகின்றனர். இதனால் விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கால்நடை ஆஸ்பத்திரிகளில் எந்த மருந்தும் இருப்பு இல்லை. இதனால் கால்நடைகள் இறப்பு அதிகரித்து வருகிறது. சுந்தரமுடையான் அரசு பழப்பண்ணை நிதி பற்றாக்குறையால் முடங்கி போய் உள்ளது. எந்த மரக்கன்றும் சப்ளை செய்வது இல்லை. எந்த பணியும் நடக்கவில்லை. அங்கு வேலை பார்த்த பணியாளர்களுக்கு கடந்த பல நாட்களாக சம்பளம் கொடுக்கவில்லை. வேலையும் இல்லை.
இழப்பீடு
இதனால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட இந்த பழப்பண்ணை தற்போது இந்த நிலைக்கு சென்றதற்கு நிர்வாக குறைபாடே காரணம். இதனை சரிசெய்ய வேண்டும். மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வில்லை. கடந்த ஆண்டு பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் பேசியதாவது:- உரம் தேவைக்கேற்ப வரவழைத்து சப்ளை செய்து வருகிறோம். மேலும் உரம் கூடுதலாக வந்து கொண்டிருக்கிறது. தேவைப்படும் பகுதிகளில் சப்ளை செய்யப்படும். பயிர்காப்பீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி வருகிறோம். விரைவில் விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடை பெற்றுத்தருவோம். இவ்வாறு பேசினார்.
Related Tags :
Next Story