கொரோனா தற்காலிக பணியாளர்கள் கல்லூரி முதல்வரை முற்றுகை-மறியல்


கொரோனா தற்காலிக பணியாளர்கள் கல்லூரி முதல்வரை முற்றுகை-மறியல்
x
தினத்தந்தி 26 Nov 2021 10:52 PM IST (Updated: 26 Nov 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தற்காலிக பணியாளர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்: 


தற்காலிக பணியாளர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டன. மேலும் கடந்த மே மாதம் செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் என பல்வேறு பதவிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்த இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்து வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் அழைத்த மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. எனவே உங்கள் பணிக்காலமும் முடிவடைந்துவிட்டது. நாளை முதல் நீங்கள் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தற்காலிக பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்றனர்.

முற்றுகை
பின்னர் அங்குள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகத்துக்கு சென்ற அவர்கள், கல்லூரி முதல்வர் விஜயகுமாரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கொரோனா காலத்தில் எங்களின் குடும்பத்தினரை பிரிந்து இரவு, பகல் பாராமல் வேலை பார்த்தோம். ஆனால் அதற்கான சம்பளம் கூட இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் எங்களை வேலைக்கு வரவேண்டாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனே வழங்க வேண்டும் அல்லது எங்களின் பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதையடுத்து பேசிய கல்லூரி முதல்வர், தற்காலிக பணியாளர்களுக்கான காலக்கெடு நிறைவடைந்துவிட்டது. 6 மாதத்துக்கான சம்பள தொகை இன்னும் ஒரு வாரத்தில் வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்டுவிடும் என்றார். ஆனாலும் சமாதானம் அடையாத தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல்
ஆனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அரசு மருத்துவமனை முன்பு சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே தற்காலிக பணியாளர் போராட்டம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் வந்து தற்காலிக பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உங்கள் குறைகள் குறித்து மனுவாக கொடுங்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் சமரசம் அடைந்த தற்காலிக பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story