விடிய, விடிய பெய்த கனமழையால் மீனவர் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
கொள்ளிடம் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் மீனவர் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கொள்ளிடம்:
கொள்ளிடம் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் மீனவர் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கொள்ளிடம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நேற்று இரவு வரை நீடித்தது. விடிய, விடிய பெய்த கனமழையால் கொள்ளிடம் கடைமடை பகுதியில் பள்ளமான நிலப்பரப்புகளில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் வேட்டங்குடி, எடமணல், வடகால், பச்சை பெருமாநல்லூர், உமையாள்பதி, பழையபாளையம், தாண்டவன்குளம், தற்காஸ், புளியந்துறை, குன்னம் மாதிரவேளூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அளக்குடி ஊராட்சி வெள்ளமணல் மீனவ கிராமங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஆரப்பள்ளம் கிராமத்தில் கிட்டியானை உப்பனாற்றில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் வடிகால் வசதியின்றி அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொறையாறு
தரங்கம்பாடி, பொறையாறு, செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், கீழையூர், கஞ்சாநகரம், இலுப்பூர், சங்கரன்பந்தல், காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது. பின்னர் பகல் முழுவதும் மழை நின்றுவிட்டது. இதையடுத்து நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
இந்த மழையால் பொறையாறு, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், மேமாத்தூர், கீழ்மாத்தூர், சங்கரன்பந்தல் விசலூர், எடுத்துக்கட்டி, பரசலூர், திருச்சம்பள்ளி, விளநகர், மேலப்பாதி, காலகஸ்திநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் தங்களின் பைபர் படகுகளை கரைேயாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு குளங்கள் மழைநீரால் நிரம்பியுள்ளன. இந்தநிலையில் நேற்று திருவிழந்தூர் மேலஆராயத்தெரு பிள்ளையார் கோவில் குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் குளத்தை ஒட்டியுள்ள மின்கம்பங்கள் சாயும் அபாய நிலையில் உள்ளன. இதேபோல திருவிழந்தூர் கவரத்தெருவில் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவில் குளம் மழைநீரால் நிரம்பி வடிய வழியில்லாமல் அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. எனவே இந்த பகுதியில் வடிகால்களை நகராட்சி நிர்வாகம் உடனே சீரமைத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும், பிள்ளையார் கோவில் குளத்தில் பக்கவாட்டில் உள்ள மின்கம்பங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை விட்டு, விட்டு பெய்தது. இந்த மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
திருவெண்காடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்திரபாடி முதல் கொடியம்பாளையம் வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக பூம்புகார் மற்றும் பழையாறு மீன்பிடித்துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 48 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மயிலாடுதுறை-44, சீர்காழி-45, மணல்மேடு-17, கொள்ளிடம்-21. நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்தது.
Related Tags :
Next Story