பயிர்சேத கணக்கெடுப்பு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை


பயிர்சேத கணக்கெடுப்பு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2021 6:06 PM GMT (Updated: 26 Nov 2021 6:06 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் பயிர்சேத கணக்கெடுப்பு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பயிர்சேத கணக்கெடுப்பு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, வேளாண் அதிகாரி மகேந்திரபிரதாப் தீட்சித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திர காவேரி ஆறு 78 மீட்டர் அகலம் கொண்டது. இந்த ஆறு தற்போது 10 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. பலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட்டிக்க வேண்டும்

மேல்அரசம்பட்டு கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். தற்போது வருமானம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே தென்னை மற்றும் பனைகளில் பதனீர் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பயிர்கள் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை கணக்கீடு செய்ய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். லத்தேரி ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க வேண்டும். சேத்துவண்டை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் அடங்கல் வழங்கவும் மற்றும் நிலங்களை அளவீடு செய்யவும் அதிகளவில் பணம் வசூல் செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ஏரிக்கரைகள் உடைப்பது சட்டப்படி குற்றம். சில ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அந்த ஊர்மக்களே அகற்றிவிடுகின்றனர். இதனால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லத்தேரி ஏரி தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்யப்படும் என்றார்.

Next Story