அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழை


அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 27 Nov 2021 1:33 AM IST (Updated: 27 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

அரியலூர்:

தொடர் மழை
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே மழை பெய்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் சராசரியாக 712 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட அதிகமாகும். மாவட்ட பகுதிகளில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கங்களான பொன்னேரி, சுத்தமல்லி அணை ஆகியவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிரம்பியதால், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் 700 ஏக்கர் பரப்பளவில் நீர் தேங்கும் பொன்னேரி முழுமையாக நிறைந்துள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
அரியலூர் நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகரில் உள்ள செட்டி ஏரி, சித்தேரி, குறிஞ்சி ஏரி, அய்யப்பன் நாயக்கன் ஏரி, சந்தன ஏரி, பள்ளி ஏரி உள்பட அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. புறவழிச்சாலை வழியாக செல்லும் நீரில் ஏராளமானோர் வலை கட்டி மீன்களை பிடித்து வருகின்றனர். அரியலூரில் இருந்து செந்துறை செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ரெயில்வே ஊழியர்கள் மழைநீர் வெளியேற பாதை ஏற்படுத்தினார்கள்.
விவசாயிகள் கவலை
தாமரைக்குளம் அருகே உள்ள சாலைகளில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கி இருந்தது. தீயணைப்பு வாகனத்தின் மூலம் சாலையில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து மண் கொட்டி சரி செய்தனர். மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேலாகவும், மருதையாற்றில் அதிக அளவிலும் தண்ணீர் செல்கிறது. மழையால், தற்போது வரை மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, காய்கறி போன்ற பயிர்கள் ஓரளவு வீணாகாமல் உள்ளன. வருகிற 30-ந் தேதி வரை அதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி வருவதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பஸ்களில் அதிக அளவு பயணிகள் செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள பாதிக்கும் மேற்பட்ட டீக்கடைகள், மீன், கோழி, இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன. பல ஊர்களில் வாரச்சந்தை நடைபெறவில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
உடையார்பாளையம்
உடையார்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை பெய்தது. இப்பகுதியில் உள்ள பல ஏரிகளிலும் உடைப்பு ஏற்பட்டு வீதிகளில் தண்ணீர் செல்வதால், வீடுகளில் தண்ணீழ் புகுந்து விடுமோ என்று மக்கள் அச்சம் அடைந்தனர். விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமலும், விவசாய வேலைகளை செய்ய முடியாமலும் தவித்தனர்.
தொடர் கனமழையால் முந்திரி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக அளவாக மழை பெய்யும். முந்திரி நன்றாக காய்க்கும். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் முந்திரி காய்க்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது, என்றனர்.
கீழப்பழுவூர்
திருமானூர் ஒன்றியம் டெல்டா பகுதியான கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் வயல் பகுதிகள் நீரில் மூழ்கின. இதைத்தொடர்ந்து நேற்று அந்த வயலில் இறங்கி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நெற்பயிர்கள் பாதிப்புக்கு காரணமான குந்தபுரம்-கள்ளூர் சாலையில் உள்ள தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்த வேண்டும். வேளாண் அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட நெல்வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.கீழப்பழுவூர் அருகே 1,100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி, தற்போது பெய்த தொடர் மழையால் நிரம்பியுள்ளது. இந்த ஏரி 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏரியில் இருந்து கலிங்கு வழியாக உபரிநீர் வெளியேறுகிறது. ஆபத்தை உணராத இளைஞர்கள் அங்கு இறங்கி மீன் பிடித்தனர். அவர்களை சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர். கரைவெட்டிபரதூர் பகுதியில் வீடுகளுக்கு புகுந்த மழைநீரை பெண்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திருமானூரில் வயல்வெளியில் மின்மாற்றி சாய்ந்தது.
விக்கிரமங்கலம்
விக்கிரமங்கலம் அருகே அம்பாபூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரச நிலையிட்டபுரம் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் கன மழையால் மருதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், அப்பகுதியில் உள்ள 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகத்தினரும், தி.மு.க.வை சேர்ந்தவர்களும் மீட்டு, விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப பள்ளியில் தற்காலிக வெள்ள நிவாரண முகாம் அமைத்து தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான போர்வை, உணவு போன்றவை வழங்கப்பட்டது.
மழை அளவு
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அரியலூர்-51.4, திருமானூர்-70.8, ஜெயங்கொணடம்-35, செந்துறை-65, ஆண்டிமடம்-36. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் இம்மாதத்தில் தற்போது வரை 1422.13 மி.மீ. மழை பெய்துள்ளது.

Related Tags :
Next Story