பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை


பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை
x
தினத்தந்தி 27 Nov 2021 1:33 AM IST (Updated: 27 Nov 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது.

பெரம்பலூர்:

இடி, மின்னலுடன் கன மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தம் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் அவ்வப்போது விட்டு, விட்டு நேற்று காலை வரை மழை பெய்தது.
மழையால் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளான இந்திரா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி, வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். துறைமங்கலம் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
தரைப்பாலம் மூழ்கியது
நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி, மழைநீருடன் கலந்து சென்று தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றதால் தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவலறிந்த பிரபாகரன் எம்.எல்.ஏ., நகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு, குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். பச்சமலை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், அதன் அடிவாரத்தில் உள்ள பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட லாடபுரம் கிராமத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் தொட்டாங்குளத்தாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் லாடபுரம்-சரவணாபுரம் இடையே உள்ள தரைப்பாலம் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட லாடபுரம் கிராமத்திற்கு நேற்று அதிகாலை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முகாம்களில் தங்க வைப்பு
இதேபோல் கீழக்கரை, வடக்கு மாதவி, நெடுவாசல் கிராமங்களில் இரவு பெய்த மழை காரணமாக ஆற்றோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். குன்னம் தாலுகாவில் முருக்கன்குடி-கார்குடி இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
மருதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுயதில், அதன் கரையோர கிராமமான தெற்கு மாதவி கிராமத்திற்குள்ளும், விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. பெருமத்தூர்-மிளகாநத்தம் இடையே உள்ள தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியது. ஆனால் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் பலத்த மழை பெய்யாமல், அவ்வப்போது மழை தூறிக்கொண்டிருந்தது.
பயிர்கள் பாதிப்பு
வடகிழக்கு பருவமழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அறுவடைக்கு தயாராகி வரும் சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் புகுந்து நாசமாயின.
மேலும் மரவள்ளி, கருணை கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களிலும் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏற்றவாறு அரசின் நிவாரண தொகையை பெற்று தருமாறு விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பந்தட்டை
வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து கல்லாற்றின் கரையோரம் உள்ள வி.களத்தூர் மற்றும் அயன்பேரையூர் கிராமங்களில் தாழ்வான பகுதியில் குடியிருந்தவர்களில் 23 பேர் வி.களத்தூர் சமுதாயக் கூடத்திலும், 19 பேர் அயன்பேரையூர் சமுதாயக் கூடத்திலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆலயமணி மற்றும் ஊராட்சி தலைவர் பிரபு ஆகியோர் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story