செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 26 Nov 2021 8:06 PM GMT (Updated: 26 Nov 2021 8:06 PM GMT)

பிரிந்து சென்ற மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

மதுரை
பிரிந்து சென்ற மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
 தற்கொலை முயற்சி
மதுரை கீரைத்துறை லிங்கேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 26). சரக்கு வேன் டிரைவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், சின்னஉடைப்பு பகுதியை சேர்ந்த லட்சுமி(22) என்பவருக்கும் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே கணவருடன் கோபித்து கொண்டு லட்சுமி அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
மேலும் அவர் பெருங்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.  கண்ணன் அங்கு சென்று மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் வரமறுத்து விட்டார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
செல்போன் டவரில் ஏறி மிரட்டல்
இந்தநிலையில் நேற்று காலை அவர் மதுகுடித்து விட்டு கீரைத்துறை மயானம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார். சுமார் 120 அடி உயரம் உள்ள கோபுரத்தின் உச்சியில் ஏறிய அவர் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.
தகவல் அறிந்து கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அனுப்பானடி தீயணைப்புத்துறையினர் அவரை மீட்க கோபுரத்தில் ஏற முயன்றனர். அப்போது கண்ணன் ஒற்றை கையில் கம்பியை பிடித்து தொங்கி யாரும் மேலே வந்தால் கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் தீயணைப்புத்துறையினர் கோபுரத்தில் மேலே ஏறுவதை கைவிட்டு விட்டனர்.
3 மணி நேர போராட்டம்
பின்னர் போலீசார் கீழே இருந்து ஒலிபெருக்கி மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனது மனைவி இங்கு வரும் வரை கீழே இறங்க மாட்டேன் என்றார். இதனால் வேறு வழியின்றி போலீசார் அவரது மனைவியை அங்கு அழைத்து வந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கண்ணன் மேலே இருந்து கீழே இறங்க தொடங்கினார். ஆனால் பாதியில் இறங்கி வரும்போது தனது மனைவி கழுத்தில் தாலி இல்லை என்றும், தான் கீழே வந்த பிறகு எங்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூச்சல் போட்டார். உடனே போலீசார் புதிதாக மஞ்சள் கயிறு வாங்கி அதனை காண்பித்தனர். அதை பார்த்த  பிறகு தான் அவர் கீழே இறங்கி வந்தார். அங்கு போலீசார் முன்னிலையில் மனைவி கழுத்தில் மீண்டும் கண்ணன் தாலி கட்டினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story