மண் திட்டு சரிந்து கிணற்றில் விழுந்து விவசாயி சாவு
மண் திட்டு சரிந்து கிணற்றில் விழுந்து விவசாயி சாவு
வாழப்பாடி, நவ.27-
வாழப்பாடி அருகே மண் திட்டு சரிந்து கிணற்றில் விழுந்து விவசாயி இறந்தார். 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது.
விவசாயி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 55). விவசாயி. இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், அருள்மணி என்ற மகனும், அகிலா, ஆர்த்தி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
தொடர் மழை காரணமாக இவருடைய விவசாய கிணற்றில் தண்ணீர் நிரம்பியதோடு கிணற்றை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்தன. எனவே நேற்று மதியம் 1 மணி அளவில் செடி, கொடிகளை அப்புறப்படுத்தும் பணியில் பழனி ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றின் மண் திட்டு சரிந்ததால் மேட்டில் நின்ற பழனி மண் திட்டோடு கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
உடல் மீட்பு
இதனை கண்ட உறவினர்கள் இதுகுறித்து வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர் மற்றும் வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வையாபுரி தலைமையில் போலீசார் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பழனிசாமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 70 அடி வரை தண்ணீரை வெளியேற்றினால் தான் மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மண் திட்டு சரிந்து விழுந்து தண்ணீர் கலங்கியதால் நவீன கேமராவை பயன்படுத்தியும் விவசாயியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், பொதுமக்கள் உதவியுடன் விவசாயிகளின் 5 மின் மோட்டார்களை கொண்டு வந்து கிணற்றில் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றினர். இதையடுத்து சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பழனியின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவருடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story