குளமாக மாறிய நெல்லை சந்திப்பு; பொதுமக்கள் கடும் அவதி
நெல்லை டவுன் நயினார்குளம் மறுகால் தண்ணீர் வாய்க்கால் மூலம் வருவதால் நெல்லை சந்திப்பு பகுதி குளம் போல் மாறியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை டவுன் நயினார்குளம் மறுகால் தண்ணீர் வாய்க்கால் மூலம் வருவதால் நெல்லை சந்திப்பு பகுதி குளம் போல் மாறியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
கன மழை
நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நெல்லை மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளைநகர், சேவியர் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
குளம் போல் மாறியது
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெல்லை டவுன் நயினார்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. அதிகளவு தண்ணீர் வருவதால் அங்குள்ள வயல் பகுதிகளில் தேங்கி கிடக்கிறது.
அந்த தண்ணீர் வாய்க்கால் மூலம் வெளியேறி, நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிக்கு வந்து சேர்கிறது. அங்குள்ள அடைப்புகள் காரணமாக தண்ணீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் குளம் போல் மாறியது.
மக்கள் அவதி
மேலும் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள் காரணமாக, அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றுவதால் அந்த தண்ணீரும் இங்கு வந்து சேருகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால் அங்குள்ள ஓடைகளில் செல்ல முடியாத அளவிற்கு தேங்கி நிற்கிறது.
இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லக்கூடிய மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
கோரிக்கை
இந்த நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் ெபாக்லைன் எந்திரம் உதவியுடன் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்படி இருந்தும் தண்ணீர் முழுமையாக வடியாமல் தேங்கி உள்ளது.
எனவே தேங்கிய மழைநீரை வடிய வைப்பதற்கு போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள ஓடையை வெட்டி சரிசெய்து அந்த வழியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story