இனிமேல் தலித்துகளிடம் காங்கிரசின் ஏமாற்று வேலை எடுபடாது - மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேச்சு
இனிமேல் தலித்துகளிடம் காங்கிரசின் ஏமாற்று வேலை எடுபடாது என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
பெங்களூரு:
முன்னேற வேண்டும்
கர்நாடக பா.ஜனதாவின் எஸ்.சி. அணி சார்பில் அரசியல் சாசன தின விழா பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பிரதமர் மோடி, அம்பேத்கர் வாழ்ந்த வீடு, அலுவலகம், வெளிநாட்டில் கல்வி பயில சென்று தங்கிய வீடு ஆகியவற்றை வாங்கி அதை மேம்படுத்தி பாதுகாத்துள்ளார். அவரது சமாதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தலித் சமூக குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்கள். தலித் மக்கள் கல்வி பெற வேண்டும், அவர்கள் முன்னேற வேண்டும் என்று விரும்பினார்.
காங்கிரசின் ஏமாற்று வேலை
கல்வி அறிவு பெற்ற தலித் மக்கள், காங்கிரசிடம் இருந்து விலகி செல்கிறார்கள். காங்கிரஸ் இன்னும் 3 ஆண்டுகள் கூட இருக்காது. நாட்டில் காங்கிரஸ் கட்சி 90 சதவீதம் அழிந்துவிட்டது. இன்னும் 10 சதவீதம் தான் அக்கட்சி உயிர்ப்புடன் உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். இனிமேல் தலித்துகளிடம் காங்கிரஸ் கட்சியின் ஏமாற்று வேலை எடுபடாது.
சிறுபான்மை மக்கள் காங்கிரசின் அடிமைகள் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆனால் அத்தகைய காலம் போய்விட்டது. நாட்டை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அம்பேத்கரை மறந்துவிட்டது. அக்கட்சி தலித் மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. சாதி-மாதங்கள் இடையே பகை உணர்வை ஏற்படுத்தும் வேலையை காங்கிரசார் செய்தனர். காங்கிரசின் உண்மை முகத்தை படித்த தலித் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு தலித் மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
Related Tags :
Next Story