ஓசூரில் துணிகரம் தொழில் அதிபர் வீட்டில் 20 பவுன் நகை ரூ2½ லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் தொழில் அதிபர் வீட்டில் 20 பவுன் நகை ரூ2½ லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
ஓசூரில் தொழில் அதிபர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2½ லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழில் அதிபர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஸ்ரீபத்தநெல்லூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 51). தொழில் அதிபர். இவர் ஓசூரில் பேகேப்பள்ளி அனுமேப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் தங்கி எந்திரங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு, கோவில் திருவிழாவிற்காக சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இவரது வீட்டின் முன்பக்க கிரில் கதவு மற்றும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
போலீசார் விசாரணை
இந்த நிலையில், ஊருக்கு திரும்பிய பாஸ்கர் வீட்டில் நகைகள், பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அவர், ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருட்டு போன வீட்டை பார்வையிட்டு பாஸ்கர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story