கடை ஊழியரை கீழே தள்ளிவிட்டு நகையுடன் தப்பி ஓடிய ‘டிப்-டாப்’ ஆசாமி


கடை ஊழியரை கீழே தள்ளிவிட்டு நகையுடன் தப்பி ஓடிய ‘டிப்-டாப்’ ஆசாமி
x
தினத்தந்தி 27 Nov 2021 6:46 AM GMT (Updated: 27 Nov 2021 6:46 AM GMT)

நகை கடை ஊழியரை கீழே தள்ளிவிட்டு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகையை பறித்துவிட்டு தப்பிய ‘டிப்-டாப்’ ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நகை கடை ஒன்றில் நகை வாங்குவது போல் ‘டிப்-டாப்’ ஆசாமி ஒருவர் வந்தார். நகை கடை ஊழியரிடம் தனக்கு 3 தங்க சங்கிலிகள் வேண்டும் என்றார். ஊழியர் கடையில் தங்க சங்கிலி மாடல்களை எடுத்து அவரிடம் காண்பித்தார்.

‘டிப்-டாப்’ ஆசாமி, அந்த தங்க சங்கிலிகளை பார்த்துவிட்டு அதில் 3 சங்கிலிகளை தேர்வு செய்தார். பின்னர் அதனை தனது வீட்டில் உள்ளவர்களிடம் காண்பித்துவிட்டு வாங்கி கொள்வதாக கூறினார். இதனால் நகை கடை ஊழியர் ஒருவர் அந்த நகைகளை எடுத்துக்கொண்டு ‘டிப்-டாப்’ ஆசாமியுடன் கடையில் இருந்து வெளியே வந்தார்.

பின்னர் ‘டிப்-டாப்’ அங்கு நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை ‘ஸ்டார்ட்’ செய்தார். கடை ஊழியரும் அவருடன் செல்ல மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏற முயன்றார். அப்போது ‘டிப்-டாப்’ ஆசாமி திடீரென நகை கடை ஊழியரிடம் இருந்த நகையை பறித்துவிட்டு அவரை கீழே தள்ளி விட்டு மோட்டார்சைக்கிளில் ேவகமாக சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் ‘டிப்-டாப்’ ஆசாமி தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான ‘டிப்-டாப்’ ஆசாமியின் உருவத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

‘டிப்-டாப்’ ஆசாமி பறித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.1.80 லட்சம் என நகை கடை சார்பில் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Next Story