விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அதிக மகசூல் பெறுங்கள் - வேளாண் அதிகாரி வேண்டுகோள்
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அதிக மகசூல் பெறுங்கள் என்று வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சம்பத்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-
நவீன உலகில் விவசாய தொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும், நகர மயமாக்குதலால், சாகுபடி பரப்பளவும் குறைந்துகொண்டே வருகின்றது. எனினும் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரங்களாக நிலவளமும், நீர்வளமும் அமைகின்றது. நிலத்தின் வளத்தை நிர்வகிப்பதில் மண் பரிசோதனை மிக முக்கியமானதாகும்.
மண் பரிசோதனை செய்வதால் மண்ணின் தன்மை, சுண்ணாம்பு நிலை, உப்பின் நிலை, அமிலகார நிலை, பேரூட்ட சத்துகளான தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவையும், நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் தாமிர சத்துகளின் அளவையும் கந்தகம், போரான் போன்ற சத்துகளின் அளவை அறிந்து கொள்ள முடியும். களர், உவர் மற்றும் அமில நிலங்களை கண்டறிந்து அவற்றை சீர்திருத்தம் செய்யவும், பயிருக்கு ஏற்ப சமச்சீர் உர பரிந்துரை வழங்கவும் மண் பரிசோதனை அவசியமாகிறது. விளைநிலங்களில் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் மண் பரிசோதனை கூடம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மண்வள அட்டை திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் மண்வள அட்டை வடிவில் வழங்கப்படுகிறது. மண்வள அட்டையில் சமச்சீர், உர பரிந்துரைகள், களர், உவர், அமில மற்றும் சுண்ணாம்பு நிலங்களுக்கான சீர்திருத்த பரிந்துரைகள், இயற்கை மற்றும் நுண்ணுயிர் உர பரிந்துரைகள் மற்றும் நுண்ணூட்ட சத்து பரிந்துரைகள் வழங்கப்படுகிறது. இங்கு மண் மாதிரி ஆய்வு கட்டணமாக பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்து ஆய்வுக்கு ரூ.20, பாசன நீர் ஆய்வு கட்டணமாக ரூ.20 பெறப்படுகிறது.
நடமாடும் மண் பரிசோதனை கூடத்தின் வாகனத்தின் மூலம் கிராமங்களுக்கு சென்று நேரடியாக விவசாயிகளிடம் இருந்து மண் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து ஆய்வு முடிவுகள் மண்வள அட்டை மூலம் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. இந்த திட்ட திரவ உயிர் உரங்களுடன், நெல், பயறு வகைகள், நிலக்கடலை மற்றும் தென்னை போன்ற பயிர்களுக்கான நுண்ணூட்ட உரங்களும், திருவள்ளூர் மாவட்ட அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மண் ஆய்வு செய்து மண்வள அட்டையின் பரிந்துரையின்படி உரமிட்டு ரசாயன உரங்களை குறைத்து திட மற்றும் திரவ உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி மண் வளம் காத்து அதிக மகசூல் பெறவேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story