கிணற்றை தூர்வாரியபோது மண் சரிந்து தொழிலாளி பலி
போடி அருகே. கிணற்றை தூர்வாரியபோது மண் சரிந்து தொழிலாளி பலியானார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போடி:
தொழிலாளி பலி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பத்ரகாளிபுரம் பண்ணைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 40). பத்ரகாளிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் உதயசூரியன் (55). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும், போடி முந்தல் சாலையில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் நேற்று தூர்வாரி கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்தது. இதில் 2 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகருப்பன் பிணமாக மீட்கப்பட்டார். மண் சரிந்து விழுந்ததில், அவர் பலியானது தெரியவந்தது.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயத்துடன் உதயசூரியன் மீட்கப்பட்டார். அவருக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உறவினர்கள் மறியல்
இதற்கிடையே 2 தொழிலாளர்களின் உறவினர்களும் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். கிணற்றை தூர்வாரியபோது போதிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் இறந்த பெரியகருப்பன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ராமலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இதனையடுத்து பெரியகருப்பனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியான பெரியகருப்பனுக்கு போதுமணி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story