ஓட்டப்பிடாரம் அருகே கனமழை; 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
ஓட்டப்பிடாரம் அருகே பெய்த கனமழையால் 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழையால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. தொடர் மழையால் ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டி பஞ்சாயத்து ஒட்டுடன்பட்டி கிராமத்தில் உள்ள வேட்டைவராயன் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இந்த தண்ணீரானது சீவலப்பேரி கண்மாய்க்கு சென்று தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. வேட்டைவராயன் கண்மாயில் இருந்து சீவலப்பேரி கண்மாய்க்கு செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. மேலும் குறுகிய ஓடையில் சீமைக்கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன.
இதனால் வேட்டைவராயன் கண்மாய் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அழுக தொடங்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வேட்டைவராயன் கண்மாய் மறுகால் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், கண்மாய் உபரிநீர் முறையாக வடிந்து செல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
இதனால் நகைகளை அடமானம் வைத்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட எங்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஓடை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். வெள்ளத்தால் மூழ்கி அழுகிய நெற்பயிர்களை பார்த்த சில விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதேபோன்று ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் கிராமம் வழியாக செல்லும் உப்பாற்று ஓடையின் மூலம் கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. உப்பாற்று ஓடையில் நீர் வரத்து அதிகரித்ததால், ஆரைக்குளம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்ட உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. எனவே உப்பாற்று ஓடையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story