நாமக்கல் மாவட்டம் முழுவதும், இன்று 506 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்டம் முழுவதும், இன்று 506 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 506 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -
506 மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 10,02,218 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 5,37,414 நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 506 மையங்களில் 12-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும் உருமாறிய புதிய வகை கொரோனா தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இது மிக விரைவாக பரவும் வகையிலானது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய விமான நிலையங்களில் பல்வேறு நாடுகளின் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
அலட்சியமாக உள்ளனர்
நாமக்கல் மாவட்டம் பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புடைய தொழில்கள் நடைபெறும் மாவட்டமாகும். எனவே வெளி மாநிலங்களுக்கு சென்று வருவோர் மிகவும் பாதுகாப்பாக கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயது நிறைந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான 3,82,082 நபர்கள் இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை. முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களில் 4,64,804 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே தற்போது முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து அனைவரும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.
1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்பசு காதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 477 நிலையான முகாம்கள் மூலமாகவும், 29 நடமாடும் குழுக்கள் மூலமாகம் மொத்தம் 506 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன் மூலம் சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story