சகதி காடாய் மாறிய மார்க்கெட்டால் பொதுமக்கள் திண்டாட்டம்


சகதி காடாய் மாறிய மார்க்கெட்டால் பொதுமக்கள் திண்டாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2021 11:42 PM IST (Updated: 27 Nov 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பெய்து வரும் மழை காரணமாக பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட் வளாகமானது சகதி காடாக மாறியுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

திருப்பூர்
திருப்பூரில் பெய்து வரும் மழை காரணமாக பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி மார்க்கெட் வளாகமானது சகதி காடாக மாறியுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சகதி காடு
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் தினசரி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் சில்லறை விற்பனை மற்றும் மொத்த வியாபாரம் நடந்து வருகிறது. மாநகரின் பிரதான மார்க்கெட்டாக இது இருப்பதால் திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மார்க்கெட்டிற்கு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரம் நடக்கும் இடத்தில் சிமெண்டு தளம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கு மண் தளத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மார்க்கெட் வளாகம் முழுவதும் உழுது போட்ட வயல் போல சகதி காடாக காட்சியளிக்கிறது. இதனால் மார்க்கெட்டில் எங்குமே கால் வைக்க முடியாத அளவிற்கு சகதியாக இருப்பதால் மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் திண்டாட்டம்
இதேபோல், காய்கறி வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் நின்று காய்கறி வாங்குவதற்கு வழியின்றியும், நடந்து செல்வதற்கு வழியின்றியும் சிரமப்படுகின்றனர். இதில் பலர் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். மேலும், மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களும், இங்கிருந்து வெளியிடங்களுக்கு காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்களும் சேற்றில் அடிக்கடி சிக்கி கொள்கின்றன. இதனால் காய்கறிகளை உரிய நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரும் வயலில் இறங்கி நடப்பது போல மிகவும் கவனத்துடன் அடி மேல் அடி வைத்து நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதில் குழந்தைகளுடன் வருபவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.  எனவே, மார்க்கெட்டில் சேறு நிறைந்து காணப்படும் பகுதியில் மண் கொட்டி சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?.

Next Story