விவசாயியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி சங்கிலி பறிப்பு-திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
விவசாயியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி சங்கிலி பறித்த திருச்சி வாலிபர் உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அலங்காரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் புள்ளமநாயக்கர் (வயது 57), விவசாயி. கடந்த 25-ந் தேதி இவர் தேசியமங்கலம்- பேரூர் சாலையில் கருமாதம்பட்டி பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து புள்ளமநாயக்கர் கண்களில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
போலீசில் ஒப்படைப்பு
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்காக 25 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். இதனால் பீதியடைந்த அந்த ஆசாமிகள் தங்களை பிடிக்க வந்தவர்கள் மீது மிளகாய் பொடியை தூவிய படியே சென்றுள்ளனர். அப்போது பனிக்கம்பட்டி அருகே அந்த ஆசாமிகள் சென்ற மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற திருச்சி மாவட்டம் புங்கனூர் ராம்ஜி நகரை சேர்ந்த கிரிநாதன் (வயது 44) என்பவரை பொதுமக்கள் பிடித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடிவந்தனர்.
சிறையில் அடைப்பு
இந்தநிலையில் இந்த வழக்கில் தப்பி ஓடிய திருச்சி மாவட்டம் கருமண்டபம் விசுவாஸ் நகரை சேர்ந்த ஏழுமலை (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story