தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
தேங்கி நிற்கும் மழை நீர்
ஆரல்வாய்மொழி மெயின்ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்வார்கள். மழைக்காலத்தில் ஆஸ்பத்திரி முன்பு மழைநீர் தேங்கி நிற்பதால் கால்நடைகளை அழைத்து வருபவர்கள் தேங்கி நிற்கும் மழைநீரால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மழைநீர் செல்ல ஓடை அமைக்க வேண்டும்.
செல்வகுமரன், ஆரல்வாய்மொழி.
பஸ் வசதி தேவை
திருவட்டார் அருகே உள்ள சாரூரில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊருக்கு சிறிய அளவிலான சாலை மட்டுமே உள்ளது. ஆனால், பஸ்போக்குவரத்து இல்லை. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் தினமும் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாமல் முதியோர், நோயாளிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகள் நலன்கருதி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெஞ்சித், சாரூர்.
வழிப்பாதை சீரமைக்கப்படுமா?
அழகியபாண்டியபுரம் அருகே உள்ள வாழையத்துவயல் கிராமம் ஆபேல்காடு பகுதியில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் சுடுகாட்டுக்கு செல்லும் வழி ஆகியவை சேதமடைந்து உள்ளன. தற்போது பெய்த கன மழையால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல பொது மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே வழிப்பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.மணிகண்டன், வாழையத்து வயல்.
தெருவின் அவல நிலை
துவரங்காடு மத்தியாஸ் நகர் சி.எஸ்.ஐ. சபை செல்லும் தெரு கடந்த சில மாதங்களாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த அளவுக்கு தெரு மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இந்த தெருவை சீரமைத்து, பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜே.டைட்டஸ், துவரங்காடு.
தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக சுசீந்திரத்தில் பழையாற்று நீர் ஊருக்குள் புகுந்தது. பழையாற்றின் தென்புறம் ஆஸ்ராமம் முதல் பழைய பாலம் வரையுள்ள ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சுவர் சேதமடைந்து இருப்பதால், ஆற்றுநீர் தெருவில் பாய வசதியாக உள்ளது. அதை தடுக்க ஆற்றின் கரையோரம் 3 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மேலும் சுசீந்திரத்தின் தென்புறம் நான்கு வழி சாலையில் வெள்ளம் உடனே வடிய வடிகால்கள் பெரிய அளவில் அமைக்க வேண்டும். இதில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ஏ.நாராயணன், மருங்கூர்.
தொற்று நோய் பரவும் அபாயம்
குளச்சல் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சேரும் மருத்துவ கழிவுகள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே போடப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் சேரும் மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அமீன், குளச்சல்.
Related Tags :
Next Story