மழையால் 54 வீடுகள் இடிந்தன
பெரம்பலூர் மாவட்டத்தில் மழையால் 54 வீடுகள் இடிந்தன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பெய்த மழையால் பெரம்பலூர் தாலுகாவில் 9 வீடுகள் ஒரு பகுதியாகவும், ஒரு வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதேபோல் வேப்பந்தட்டை தாலுகாவில் 12 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுவதும், ஆலத்தூர் தாலுகாவில் 3 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுவதும், குன்னம் தாலுகாவில் 20 வீடுகள் பகுதியாக இடிந்து விழுந்தும் சேதமடைந்தன. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் அரசின் நிவாரண தொகையை பெற்றுத்தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மழையின் காரணமாக ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று செத்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பெரம்பலூர் தாலுகாவில் 38 பேரும், ஆலத்தூர் தாலுகாவில் 83 பேரும், குன்னம் தாலுகாவில் 194 பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வேப்பந்தட்டை தாலுகாவில் மழையால் 800 எக்டேர் பருத்தி பயிரும், 12 எக்ேடர் மக்காச்சோளம் பயிரும், தோட்டக்கலை பயிர்களான 810 எக்டேர் மரவள்ளி பயிரும், 90 எக்டேர் கருணை கிழங்கும், 10 எக்ேடர் சம்பங்கியும், 2 எக்ேடர் பப்பாளியும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மழையின் காரணமாக நேற்று பெரம்பலூர் தாலுகாவில் 5 வீடுகளும், வேப்பந்தட்டை தாலுகாவில் 2 வீடுகளும் பகுதியாக இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. பெரம்பலூர் தாலுகாவில் 137 பேரும், ஆலத்தூர் தாலுகாவில் 52 பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story