நெல்லையில் மீண்டும் மழை; குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் தவிப்பு
நெல்லையில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் ெபாதுமக்கள் தவித்தனர். தாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லையில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் தவித்தனர். தாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழை
வங்கக்கடலில் இலங்கை கடற்கரை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த 25-ந் தேதி பெய்த பலத்த மழையால் நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பல கிராமங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு வீடுகள் இடிந்தன.
நெல்லை மாநகர பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. நெல்லை டவுன், சந்திப்பு, மேலப்பாளையம், கொக்கிரகுளம், பாளையங்கோட்டை சேவியர் காலனி, கிருஷ்ணாபுரம், மனகாவலம்பிள்ளைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. 3 நாட்கள் ஆகியும் இந்த மழைநீர் பல இடங்களில் வடியாமல் அப்படியே உள்ளது.
தண்ணீர் தேங்கியது
மேலும், நெல்லை டவுனில் இருந்து சேரன்மாதேவி செல்லும் சாலையில் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே இன்னும் வெள்ளம் வடியாததால் அந்த பகுதியில் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. அந்த தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்து செல்கின்றன. நெல்லை டவுன் செண்பகம்பிள்ளை தெருவில் மழை நீர் ஆறாக ஓடுகிறது. அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் மழை நீருக்குள் குடத்தை வைத்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
இதேபோல் நெல்லை டவுன் மேட்டுத்தெரு, கரிக்கா தோப்பு, சொக்கட்டான் தோப்பு வழியாக செல்லும் தண்ணீர் குன்னத்தூரில் தேங்கி உள்ளது. இதனால் தெற்கு மவுண்ட்ரோடு, குன்னத்தூர் வரை உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் பல்வேறு தெருக்களில் கரண்டை கால் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. மகிழ்வண்ணநாதபுரம் தெருவிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பொதுமக்கள் தவிப்பு
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதி, தெற்கு பாலபாக்யா நகர், மேம்பாலம் கீழ்ப்பகுதி, மனகாவலம்பிள்ளை நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது. நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
மேலும் மழைநீரை வடிய வைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் 1 மணி வரை வெயில் அடித்தது. அதன்பிறகு சில இடங்களில் மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் நேற்று மதியம் 2 மணிக்கு பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. பொதுமக்கள் குடைபிடித்தபடி சாலையில் நடந்து சென்றனர். இந்த மழையால் சாலைகளில் மீண்டும் மழைநீர் தேங்கியது. சாலையில் ஆங்காங்கே கிடக்கும் சிறிய, பெரிய பள்ளங்களால் நேற்று மதியம் நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.
அணைகள் நிலவரம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 689 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணை நீர்மட்டம் 138.75 அடியாக உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 142.60 அடியாகவும் உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102.20 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 294 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 34.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 49 அடியாகவும் உள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் 82.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 68.24 அடியாகவும், அடவிநயினார் நீர்மட்டம் 130.50 அடியாகவும், குண்டாறு அணை 36.10 அடியாகவும் உள்ளது.
2-வது நாளாக வெள்ளம்
இந்த அணைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளதால் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் அணைகளின் நீர் மற்றும் பல்வேறு பகுதியில் பெய்த மழை நீர் கலந்து காட்டாற்று வெள்ளம் செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையை தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், ஆற்றுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-53, சேர்வலாறு- 22, மணிமுத்தாறு-29, நம்பியாறு-10, கொடுமுடியாறு-35, அம்பை-16, சேரன்மாதேவி- 9, ராதாபுரம்-17, களக்காடு- 13, பாளையங்கோட்டை-3, நெல்லை-4, தென்காசி-2.
Related Tags :
Next Story