48 சாயப்பட்டறைக்கு ரூ.1 கோடி அபராதம்
48 சாயப்பட்டறைக்கு ரூ.1 கோடி அபராதம்
சேலம், நவ.28-
சேலம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் வெளியேற்றம் செய்தது தொடர்பாக 48 சாயப்பட்டறைக்கு ரூ.1 கோடியே 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் வெளியேற்றம்
சேலம் திருமணிமுத்தாற்றில் தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலப்பதால் திருமணிமுத்தாறு மாசு அடைந்துவிட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதிகள், திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை விட்டு மாசு அடைவதற்கு காரணமானவர்களுக்கும், உள்ளாட்சி அலுவலகங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்து மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டனர்.
அறிக்கை தாக்கல்
இதனை தொடர்ந்து பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் அளித்த உத்தரவை தொடர்ந்து திருமணித்தாற்றில் கழிவுநீரை கலந்து மாசு அடைவதற்கு காரணமானவர்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் அளித்தனர்.
அதில், சேலம் திருமணி முத்தாற்றில் கழிவுநீரை வெளியேற்றிய 77 சாயப்பட்டறைகள், 10 சேகோ ஆலைகளுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையாக ரூ.5 கோடியே 41 லட்சத்து 44 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
அபராதம்
இதையடுத்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி திருமணி முத்தாற்றில் கழிவுநீரை விட்ட 48 சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 6 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இன்னும் 39 உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.35 கோடி அபராதம் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story