இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டும்


இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டும்
x
தினத்தந்தி 28 Nov 2021 5:18 PM IST (Updated: 28 Nov 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டும்

தளி
உடுமலை பகுதியில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கை விவசாயம்
பல்வேறு அற்புதங்கள் வியத்தகு அதிசயங்கள் ஆற்றல்களை கொண்டது இயற்கை. அதில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் தன் பங்கிற்கு பல தலைமுறைகளை கடந்தும் புவியை காத்து வருகிறது. அதனோடு இணைந்து பயணிக்கும் எந்த ஒரு உயிரினமும் ஆயுள் ஆரோக்கியம் சர்வசக்திகளை பெற்று நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்பது நிதர்சனமான உண்மை. விண்வெளியில் உள்ள ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட தானியங்கள் பயிர்களை சாகுபடி செய்து இயற்கையும் காத்து உடல்நலனையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டனர் நம் முன்னோர்கள். 
இயற்கை வேளாண்மைக்கு கால்நடைகளும் விவசாயிகளுக்கு ஒத்துழைத்து வந்தது. இதனால் பயிர் மற்றும் இயற்கை சுழற்சியும் நல்ல முறையில் நடைபெற்று மாதம் மும்மாரி மழை பொழிந்ததால் கூடுதல் விளைச்சலையும் ஈட்டினார்கள்.ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் இயற்கை விவசாயம் மெல்ல மெல்ல செயற்கைக்கு மாறியது. ரசாயன உரங்கள், செயற்கை பூச்சிக்கொல்லிகளின் வருகையால் ஆரம்ப காலகட்டத்தில் கூடுதல் விளைச்சல் கிடைத்தது. அவற்றின் மாயையில் அகப்பட்ட விவசாயிகள் பின்னால் ஏற்படப்போகும் இயற்கைக்கு முரணான மாறுபாடு உடல்நலக்குறை உள்ளிட்டவற்றை அறியவில்லை. 
மலடான நிலம்
இதனால் நிலமும் படிப்படியாக மாறி மலடாகி பயனற்றுப் போனதுடன் அதில் விளைகின்ற பொருட்களும் உடலுக்கு கேடு விளைவித்து வருகிறது.செயற்கை நிலத்தில் புகுந்ததால் பூமி வெப்பம் ஆனதுடன் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழைப்பொழிவு குறைந்து வந்தது. இதனால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய தொழில் அழியும் சூழலுக்கு தள்ளப்பட்டது. 
இந்த நிலையில் அழிவை நோக்கிச் செல்கின்ற விவசாயத்தை இயற்கையை கொண்டு மீட்பதற்காக இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறி மற்றும் கால்நடைகள் கழிவுகளை கொண்டு ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், கற்பூரகரைசல், பஞ்சகவ்யா உள்ளிட்ட பல்வேறு இயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லிகள் மூலமாக நிலத்தை செயற்கையின் பிடியிலிருந்து இயற்கைக்கு மாற்றும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஆனாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் இயற்கை விவசாயம் என்பது முழுமையடையாத நிலையே உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வருவதால் நிலமும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் ஏற்பட்ட வெப்பத்தில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. 
நிலம் குளிர்ச்சி அடைந்துள்ளதை சாதகமாக கொண்டு நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கிராமங்கள் தோறும் இயற்கை உரங்கள் பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு குறித்த முகாம்கள் நடத்தி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் இயற்கை விவசாயம் புத்துயிர் பெறுவதுடன் நோய்நொடி இல்லாத வாழ்க்கை அனைவருக்கும் அமையும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Next Story