உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் கூடலூரில் நடந்தது


உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  இரட்டை மாட்டுவண்டி பந்தயம்  கூடலூரில் நடந்தது
x
தினத்தந்தி 28 Nov 2021 5:43 PM IST (Updated: 28 Nov 2021 5:43 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

கூடலூர்:
கூடலூரில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 44-வது பிறந்தநாளையொட்டி நேற்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தேனி மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், பொருளாளர் முத்துராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போட்டியை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், தி.மு.க. நிர்வாகக்குழு இணைசெயலாளர் ஜெயக்குமார், கூடலூர் நகர செயலாளர் சி.லோகன் துரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் புள்ளிமான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெரிய மாடு ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மாட்டுவண்டி, காளைகளுடன் பங்கேற்றனர்.
காளைகளின் வயது, தூரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு போட்டி நடத்தப்பட்டது. கூடலூர்-லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த போட்டியில் மாட்டுவண்டிகளுடன் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை, நினைவு கோப்பை வழங்கப்பட்டது. முன்னதாக போட்டியில் பங்கேற்க இருந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். போட்டிக்்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Next Story