கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
நீலகிரி மாவட்டத்தில் 280 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதனை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஆய்வு செய்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 280 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதனை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஆய்வு செய்தார்.
தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டத்தில் 12-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்பட மொத்தம் 280 நிலையான தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மையங்களில் முதல் டோஸ் செலுத்தி குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியானவர்கள் 2-வது டோஸ் செலுத்தினர். மேலும் 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ள நபர்களை சுகாதாரத்துறை பணியாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
வீடு வீடாக சென்று...
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் முகாம் நடந்தது. இங்கு வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மையங்களில் இருந்து தொலைவில் வசிப்பவர்கள், வனப்பகுதிகளை ஒட்டி இருப்பவர்களுக்கு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். இதற்காக 20 நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 300 முகாம்களில் 1,200 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஊட்டி படகு இல்லம், காந்தல் முக்கோணம் அங்கன்வாடி மையம், பிங்கர்போஸ்ட், குன்னூர் அருகே பேரட்டி, பாரஸ்டேன் ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் செலுத்தப்பட்டதா என்று கேட்டறிந்தார்.
அவர்களிடம் வீட்டின் அருகே வசிப்பவர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயதிற்கு மேல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
9½ லட்சம் டோஸ்
ஆய்வின்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். நீலகிரியில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரத்து 647 பேர் முதல் டோஸ் செலுத்தி கொண்டனர். 4 லட்சத்து 30 ஆயிரத்து 646 பேர் 2-வது டோஸ் போட்டுக்கொண்டனர். மொத்தம் 9 லட்சத்து 48 ஆயிரத்து 293 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story