மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Nov 2021 9:48 PM IST (Updated: 28 Nov 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்


விழுப்புரம்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
காட்டுப்பன்றிகளிடமிருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக வனத்துறையினர், விவசாயிகள் அடங்கிய கூட்டம் ஒன்றை தனியாக நடத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் சில விதை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகள் விற்கப்படுவதை தடுக்க விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தானியங்கி விதை மையம் அமைக்க வேண்டும். 

கால்நடை மருத்துவமுகாம்

கோமாரி நோயால் பல இடங்களில் கால்நடைகள் இறந்துள்ளன. எனவே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும். மரக்காணம், முருக்கேரி பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில் மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.  தற்போது பெய்த தொடர் கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகளில் நிரம்பி உள்ள தண்ணீரை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த ஏதுவாக மீன் குத்தகைக்கு ஏரியை ஏலம் விடக்கூடாது. மழையால் சேதம் அடைந்துள்ள சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

நிவாரணம்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் சேதம் அடைந்த பயிர்களை முறயைாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நெல் பயிருக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். கால்நடைகள் உயிரிழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும் மழையினால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பம் ரெயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவதால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேவைக்கேற்ப உரம் வழங்க வேண்டும்
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் நகரில் உள்ள பூந்தோட்டம், ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து வாய்க்கால்களை மீட்டெடுத்து தண்ணீர் வரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர். இதை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் டி.மோகன், விவசாயிகள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

2,92,700 மரக்கன்றுகள் 

மேலும் அவர் பேசுகையில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கிழ் விழுப்புரம் மாவட்டத்தில் 2,92,700 மரக்கன்றுகள் வனத்துறையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தேக்கு, வேங்கை, நெல்லி, வேம்பு, சந்தனம் உள்ளிட்ட 23 வகையான மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 மானியமாக வழங்கப்படும். வரப்பு நடவுமுறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். மேலும் உலர்களம் அமைக்க ஒவ்வொரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம், எந்த புகாரும் ஆதாரத்துடன் என்னிடம் சமர்பித்தால் அதன் உண்மை தன்மை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், வேளாண் இணை இயக்குனர் ரமணன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story