விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மழையால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு புதிய வீடுகள் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு


விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மழையால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு புதிய வீடுகள் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 28 Nov 2021 4:41 PM GMT (Updated: 28 Nov 2021 4:41 PM GMT)

விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் டி.மோகன் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

விழுப்புரம்

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பகுதி மற்றும் அங்குள்ள குளத்திற்கு மழைநீர் வரத்து குறித்து மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் குளத்திற்கு மழைநீர் வரத்திற்கான பணிகளை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருப்பின் அதை அகற்ற தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் ஏரிக்கரை அருகே கனமழையினால் பாதிக்கப்பட்ட இருளர் இன குடியிருப்புகளை மாவட்ட கலெக்டர் டி.மோகன், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இருளர் இன மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைவரையும் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திடவும், இருளர் இன மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு மனை வழங்கவும், அடிப்படை வசதிகளுடன் புதிய வீடுகள் கட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

பின்னர் கஸ்பாகாரணை கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏரிக்கு வரும் நீர்வரத்து மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்றும்படி கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டதோடு கனமழையினால் பாதிக்கப்படும் எனும் பகுதிகளை அரசு அலுவலர்கள் முன்கூட்டியே கண்டறிந்து போதுமான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story