அடைமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது கடலூரில் 3-வது நாளாக வெளுத்து வாங்கிய மழை குடிநீர், பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு


அடைமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது கடலூரில் 3-வது நாளாக வெளுத்து வாங்கிய மழை  குடிநீர், பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 10:18 PM IST (Updated: 28 Nov 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக வெளுத்து வாங்கி வரும் மழை, மக்களின் இயல்பு வாழ்க்கையை உடைத்து போட்டுள்ளது. மக்கள் பால், குடிநீர் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கடலூர், 

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. அதாவது வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம், வழிமண்டல சுழற்சி உருவான போதெல்லாம் கடலூரை குறிவைத்து மழை கொட்டியது.

 குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டமான கடலூருக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. 

அதன்படியே கடந்த 2 நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் பகலில் மழை சற்று ஓய்ந்து இருந்தது. ஆனால் நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

விடிய, விடிய கொட்டிய மழை, அதிகாலை 4 மணிக்கு பிறகு கனமழையாக பொழிந்தது. வானில் கருமேக கூட்டங்கள் நிறைந்து இருந்ததால் பகலும் இரவு போல் காணப்பட்டது. 

குடியிருப்புகள் தத்தளிக்கிறது

அவ்வப்போது ஓரிரு நிமிடங்கள் மழை லேசாக பெய்வதும், அடுத்து சில வினாடிகள் பெருமழையாக மாறி பின்னர் ஓய்வெடுப்பதுமாக நேற்றைய வானிலை நிகழ்வு அமைந்து இருந்தது. மொத்தத்தில் போதும்... போதும்... என்கிற அளவுக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. 

இதனால் கடலூர் மட்டுமின்றி மாவட்டத்தில் பிற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விளை நிலங்கள் என்று அனைத்தும் தண்ணீர் சூழ்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக கடலூர் பாரதி சாலை, நேதாஜி சாலை, செம்மண்டலம் சாலை, கடலூர் சில்வர் பீச் ரோடு, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், புதுப்பாளையம உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. 

பால் கிடைக்கவில்லை

இது தவிர புதுப்பாளையம் மணலி எஸ்டேட், புதுத்தெரு, கே.கே.நகர், பாரதியார் நகர், கடலூர் முதுநகர் சுத்துக்குளம், காரைக்காடு, கடலூர் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், சண்முகா நகர், நவநீதம் நகர், தானம் நகர், ஜெயலட்சுமிநகர், குண்டுஉப்பலவாடி, பத்மாவதிநகர், சாவடி அபிராமிநகர், ராகவேந்திராநகர், பிரண்ட்ஸ்நகர், ஸ்டேட் பங்க் காலனியில் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் நிற்கிறது.


இதில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களில்  பெரும்பாலானவர்கள் அத்தியாவசிய தேவையான பால், டிராக்டர் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆகியன  கிடைக்கப்பெறாமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. 

மரம் சாய்ந்து விழுந்தது

இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களிலும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்து வருகிறது. 

கடலூர் முதுநகர் வள்ளிக்காரைகாடு பகுதியில் மழைநீர் தேங்கி ஊருக்குள் தண்ணீர் சென்றது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி தண்ணீரை வடிய வைத்து வருகின்றனர்.

காரைக்காடு அங்காளம்மன் கோவில் தெருவில் ஜெயபால் மனைவி வசந்தா  என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

கடலூர் தேவனாம்பட்டினம் சாலையில் கே.டி.ஆர்.நகர் அருகே மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. 

தகவல் அறிந்ததும் மின்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மின்கம்பத்தை நட்டு மின்சாரம் வினியோகம் செய்தனர்.

பரவலாக மழை

இதேபோல் மாவட்டத்தில் டெல்டா பகுதியாக விளங்கும் லால்பேட்டை, அண்ணாமலைநகர், சிதம்பரம் மற்றும் மாவட்டத்தின் உள்பகுதியான குப்பநத்தம், வானமாதேவி, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, தொழுதூர், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட  பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொலைந்துபோயிருக்கிறது.

 நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 73.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக மே.மாத்தூரில் 12 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Next Story