அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் வடமதுரையில் நடந்தது.
திண்டுக்கல்:
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் கடந்த சில மாதங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரிவர நிதி வரவில்லை. நகர் மற்றும் கிராமப்புறங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை அ.தி.மு.க.வினர் கண்காணிக்க வேண்டும். பணிகள் சரிவர நடக்கவில்லை என்றால் மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களையும் நடத்தவேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதால் யாரும் முறைகேடு செய்ய முடியாது. முறைகேடு செய்து வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் செய்யும் பிரசாரங்களை நம்பி அ.தி.மு.க.வினர் சோர்வடைய வேண்டாம். சட்டசபை தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்து ஏமாற்றியதை மக்களிடம் கூறினாலே அ.தி.மு.க.வினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறலாம் என்றார்.
இதில் அ.தி.மு.க. மாநில இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பழனிசாமி, திண்டுக்கல் ஒன்றிய கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜ்மோகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன் (கிழக்கு), தண்டாயுதம் (மேற்கு), நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story