கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பரமக்குடி வைகை ஆற்றில் 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பரமக்குடி,
பரமக்குடி வைகை ஆற்றில் 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தடுப்பு அணை
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணையில் இருந்து மழை வெள்ள உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்து உள்ளது. அதைத்தொடர்ந்து அங்கிருந்து வைகை ஆற்றில் 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், வலது பிரதான கால்வாயில் 1,200 கன அடி தண்ணீரும், இடது பிரதான கால்வாயில் 975 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு உள்ளது.
இதை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞான சேகரன் நேற்று தெளிச்சாத்த நல்லூரில் உள்ள தடுப்பு அணைக்கு வந்து பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அந்த தண்ணீர் வீணாகாமல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.
புகார்
அதுசமயம் உதவி பொறியாளர் நிறைமதி, உதவி செயற் பொறியாளர்கள் சீனிவாசன், கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிய கவுன்சிலர் மங்களேஸ்வரி சேதுபதி தலைமையில் வந்து கடந்த 10 ஆண்டுகளாக தெளிச்சாத்தநல்லூர் கண்மாய்க்கு தண்ணீர்விட வில்லை.
இதனால் விவசாயம் செய்ய முடியாமல் நிலங்கள் பாழாகி விட்டது என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரனிடம் புகார் கூறினர். உடனே அவர் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் என்ன காரணம் எனக் கேட்டார். பின்பு உடனடியாக தெளிச்சாத்தநல்லூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் வைகை ஆறு முழுவதும் பரவலாக கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக பரமக்குடியில் இருந்து எமனேசுவரம் செல்லும் தரைப்பாலமும், ஆற்றுப் பாலம் பகுதியில் உள்ள தரைப் பாலமும் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணி
வைகை ஆற்றின் இரு கரையோரங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வலது பிரதான கால்வாய் கரையோரம் உள்ள முல்லை நகர், பாலன்நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கும் வைகை ஆற்றின் கரை யோரம் உள்ள கங்கைகொண்டான், காமன்கோட்டை, மென்னந்தி, நாகாச்சி, செவ்வூர், துரத்தியேந்தல் ஆகிய கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுஉள்ளனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு பரமக்குடி வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story