பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர்
பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபர் பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி-முதுகுளத்தூர் செல்லும் சாலையில் பரமக்குடி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்த தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் பரமக்குடி எமனேஸ்வரம் காமராஜர் நகரைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (வயது57) என்பவர் எடுத்து பேசியுள்ளார். அப்போது அலைபேசியில் அழைத்து பேசிய அந்த நபர் தான் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும் அதிகாரி என்று கூறி அவருக்கு வேண்டிய நர்ஸ் ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்து வருவதாகவும், அந்த ஆபரேஷனுக்கு உடனடியாக பணம் தேவைப்படுவதால் தான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு இரவுக்குள் பணம் போட வேண்டும் என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த தட்சிணாமூர்த்தி தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளார். மேலும் இதுகுறித்து உயர் அதிகாரி மற்றும் அலுவலகத்தில் பணி யாற்றும் சக பணியாளர்களிடம் தொடர்புகொண்டு விவரத்தை கூறியுள்ளார். அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டால் பிடித்து விடலாம் என எண்ணி இருந்தனர். ஆனால் அந்த மர்ம நபர் திரும்ப தொடர்பு கொள்ளவே இல்லை. உடனே தெட்சிணாமூர்த்தி இதுகுறித்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொலைபேசியில் அழைத்த எண்ணை சேகரித்து பேசிய மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story