50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
தோகைமலை அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தோகைமலை,
விவசாயி பலி
தோகைமலை அருகே கீழவாளியாம்பட்டியை சேர்ந்தவர் ராசா நாயக்கர். இவருடைய மகன் பாலசுப்பிரமணி (வயது 33), விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.
இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில், நீச்சல் தெரியாததால் பாலசுப்பிரமணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
உடல் மீட்பு
நீண்ட நேரமாகியும் பாலசுப்பிரமணி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அவருடைய துணி, செருப்பு ஆகியவை இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கிணற்றில் எட்டிப்பார்த்தனர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி பாலசுப்பிரமணியின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story