2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2021 1:25 AM IST (Updated: 29 Nov 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
விருதுநகர் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார். வேன் டிரைவராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி பிரியா(வயது28). 100 நாள் வேலைத்திட்டத்தில்  சென்றதுடன் 4 ஆடுகளையும் வளர்த்து வந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்த லட்சுமி பிரியா, சிவகுமாரின் உறவினர் ஆவார்.
 கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார், லட்சுமி பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது 9 வயது பெண் குழந்தை தர்ஷினி பிரியா. இவள் தம்மநாயக்கன்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.  மகன் சிவசண்முகவேல் (5). மாற்றுத்திறனாளி.
தகராறு
 சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில் தினசரி லட்சுமி பிரியாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமி பிரியாவை சந்தேகப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை அதிகரித்து வந்தநிலையில் மனவேதனை அடைந்த லட்சுமி பிரியா அடிக்கடி கணவனிடம் தான் இறந்து விடுவேன் என்று கூறி வந்தாராம்.
இந்நிலையில் நேற்று காலை லட்சுமி பிரியா யாருடனோ போனில் பேசி கொண்டு இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து  லட்சுமி பிரியா தனது இருகுழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்கு சென்றார்.
குழந்தைகளுடன் தற்கொலை 
 அங்கு இரு குழந்தைகளையும் சேலையால் தன் உடலுடன் கட்டிக்கொண்டு காலில் கல்லை கட்டி கொண்டு கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த லட்சுமிபிரியாவும், இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
குழந்தைகளை அழைத்து சென்ற லட்சுமி பிரியாவை காணவில்லை என சிவகுமார் அவர்களை தேடிய போது கிணற்று அருகே 2 ஜோடி செருப்புகள் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதுபற்றி லட்சுமி பிரியாவின் உறவினர் வீரன்(55) என்பவரிடம் போனில் தெரிவித்தார். அவர் கிராமத்திற்கு வந்து கிணற்றில் பார்த்த போது கிணற்றில் இரு குழந்தைகளுடன் லட்சுமிபிரியா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கிணற்றில் இருந்து மீட்டனர்
இதுபற்றிய வீரன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தம்மநாயக்கன்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story