இறந்தவரின் உடலை வழிப்பாதையில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு
களியக்காவிளை அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டது.
களியக்காவிளை,
களியக்காவிளை அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டது.
வழிப்பாதைக்கு கொடுத்த நிலம்
களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அந்த பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை 30 ஆண்டுகளுக்கு முன் வழிப்பாதைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இப்போது, அந்த வழியாக நான்கு வழிச்சாலை செல்வதால் அந்த இடம் தனக்கு வேண்டும் என்றும், தங்கள் பேரில் பட்டா உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் அவருடைய அக்காள் உடல்நிலை குறைவால் இறந்து விட்டார். இதையடுத்து அவரின் உடலை வழிப்பாதைக்கு கொடுத்த இடத்தில் அடக்கம் செய்யப்போவதாக கூறினார்கள். இதையறிந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
துணை சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி கோர்ட்டு மூலம் தீர்வு காணுமாறு கூறினார். மேலும், இறந்தவரின் உடலை அவரது வீட்டு வளாகத்திற்குள் அடக்கம் செய்யும்படி கூறினார். அதைதொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இறந்தவரின் உடலும் அவரது வீட்டு வளாகத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story