வாலிபரிடம் நூதன முறையில் ரூ.35 லட்சம் மோசடி
நாங்குநேரி அருகே பரிசு விழுந்திருப்பதாக கூறி, வாலிபரிடம் நூதன முறையில் ரூ.35 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெல்லை:
நாங்குநேரி அருகே பரிசு விழுந்திருப்பதாக கூறி, வாலிபரிடம் நூதன முறையில் ரூ.35 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ரூ.3.60 கோடி பரிசு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இலந்தைகுளம் பாரதி நகரைச் சேர்ந்தவர் வேத முத்து மகன் டான் (வயது 24). இவர் கேட்டரிங் படித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள், தாங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் பரிசு விழுந்து இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ரூ.35 லட்சம் மோசடி
அதனைப் பெறுவதற்கு தாங்களுக்கு ரூ.35 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி எண்ணுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய டான், முதலில் அவரது வீட்டை ரூ.10 லட்சத்துக்கு விற்று அதனை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். தொடர்ந்து தனது நண்பர்கள் சிலரிடம் ரூ.20 லட்சம் வரை கடனாகவும், தனது தாயாரின் நகைகளை ரூ.5 லட்சத்திற்கு அடமானம் வைத்தும் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் குறிப்பட்டபடி ரூ.3 கோடியே 60 லட்சம் பரிசுத் தொகையை டானுக்கு மர்ம நபர்கள் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். அப்போதுதான் மர்ம நபர்கள் நூதன முறையில் மோசடி செய்தது டானுக்கு தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து டான், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story