தென்காசியில் பரவலாக மழை; குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு


தென்காசியில் பரவலாக மழை;  குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 28 Nov 2021 9:23 PM GMT (Updated: 28 Nov 2021 9:23 PM GMT)

தென்காசியில் பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பரவலாக மழை

தென்காசி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. 
இந்த நிலையில் தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது. குற்றாலத்திலும் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றது. குற்றாலம் பஜாரிலும், பழைய குற்றாலம் செல்லும் படிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால், அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

அணைகள் நிரம்பின

ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மாலையில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. பாவூர்சத்திரம், சங்கரன்கோவிலில் மாலையில் மிதமான மழையும், செங்கோட்டை, கடையநல்லூர்,  திருவேங்கடத்தில் சாரல் மழையும் பெய்தது. 
இந்த மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன. இதனால் அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே உபரி நீராக திறந்து விடப்பட்டு உள்ளது. கடனாநதி அணையில் வினாடிக்கு 207 கன அடி தண்ணீர், ராமநதி அணையில் 30 கனஅடி, கருப்பாநதி அணையில் 70 கன அடி, குண்டாறு அணையில் 30 கன அடி,  அடவிநயினார் அணையில் 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 மழை அளவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கடனாநதி -8, கருப்பாநதி -2, குண்டாறு -1, அடவிநயினார் -5, ஆய்க்குடி -2, தென்காசி -2.

Next Story