தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Nov 2021 8:31 AM GMT (Updated: 29 Nov 2021 8:31 AM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

சிமெண்டு குழாய் அகற்றப்பட்டது
சேலம் ஜங்ஷன் முல்லைநகர் சாய்பாபா கோவில் செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக ரோட்டின் குறுக்கே சிமெண்டு குழாய் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆகியும் சிமெண்டு குழாய் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்று கடந்த 23-ந் தேதி ‘தினத்தந்தி’யில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே அதிகாரிகள் அந்த சிமெண்டு குழாயை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-பொதுமக்கள், முல்லைநகர், சேலம்.
எரியாத தெருவிளக்குகள்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் 4-வது வார்டு அய்யங்கரடு முதல் பம்பைகாரர் வட்டம் வரை தெருவிளக்குகள் எரியவில்லை. இப்பகுதியில் 150 குடும்பங்கள் உள்ளன. தற்போது தொடர் மழை காரணமாக விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருவிளக்குகளை எரியச் செய்ய சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெ.பழனிவேல், அய்யங்கரடு, ஓமலூர்.

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி இமேட்டுக்காடு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு எரியாமல் பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித  நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின் விளக்கை சரி செய்ய வேண்டும்.
-ஜோதிவேல், மகுடஞ்சாவடி, சேலம்.
சிக்னல் அமைக்க வேண்டும்
கிருஷ்ணகிரியில் சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ஆவின் மேம்பாலம் அமைந்துள்ளது. சென்னை, சேலம், பெங்களூரு, கிருஷ்ணகிரி நகருக்குள் வரக்கூடிய அனைத்து முக்கிய சாலைகளும் சந்திக்க கூடிய இடமாக இந்த ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகின்றன. கிருஷ்ணகிரி நகரில் ராயக்கோட்டை மேம்பாலம் மற்றும் நகருக்குள் 5 ரோடு ரவுண்டானா ஆகிய 2 இடங்களில் மட்டுமே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. நகரில் வேறு எந்த இடத்திலும் சிக்னல் இல்லை. எனவே ஆவின் மேம்பாலம் அருகில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், கிருஷ்ணகிரி.
தெருநாய்கள் தொல்லை
சேலம் 29-வது வார்டு அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் அந்த பகுதியில் வாகனங்களில் செல்வோரையும், நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தெருநாய்களை பிடித்து செல்லவேண்டும்.
-ஊர்மக்கள், தேவாங்கபுரம், சேலம்.
பஸ் கால அட்டவணை
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வழியாக ராசிபுரம், மேட்டூர், தொப்பையாறு, சேலம், ஈரோடு, தாரமங்கலம் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்தந்த முக்கிய பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் சென்று வரும் கால அட்டவணை வைத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
-கே.சிங்காகரம், வெண்ணந்தூர், நாமக்கல்.
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பெரிய சீரகாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட சீரகாபாடி ஆலமரம் அருகில் மழைநீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. இதன் வழியாகத்தான் சாக்கடை கழிவுநீரும் செல்கிறது. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் குப்பைகளை வாய்க்காலில் கொட்டுவதால் மழைநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசுத்தொல்லையால் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, குப்பைத்தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயகுமார், சீரகாபாடி, சேலம். 
சேறும், சகதியுமான சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர்-திருவண்ணாமலை என்.எச்.66 சாலையின் இணைப்பு சாலையாக  சோனாரஹள்ளி, ஒட்டப்பட்டி, புலியாண்டப்பட்டி வழியாக, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என தினமும் பயன்படுத்தும் முக்கிய சாலையாக  உள்ளது. தற்போது இந்த சாலை மழை காரணமாக பழுதடைந்து, சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் முழங்கால் அளவிற்கு குழி ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் சேற்றில் மாட்டி கொள்கிறது, இதனால் வாகன  ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ஊர்மக்கள், மத்தூர், கிருஷ்ணகிரி.
குண்டும், குழியுமான சாலை 
சேலம் கலெக்டர் பங்களா ரோடு முதல் புதிய பைபாஸ் (வெத்தலைக்காரன்பள்ளம் ரோடு) வரை சாலை முழுவதுமாக குண்டும், குழியுமாக  சேதமடைந்து காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக அதில் விழுந்து காயம் அடைகின்றனர். இதுபற்றி புகார்  தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தே.கொல்லப்பட்டி அருந்ததியர் காலனியில் மழைநீர் செல்ல வாய்க்கால் இல்லாததால் அந்த பகுதியில் 2 மாதங்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்றினால் நோய்கள் பரவுவதை தவிர்க்கலாம்.
-ஏ.துஷ்யேந்திரன், தேக்கம்பட்டி, ஓமலூர்.

Next Story