தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் சித்ரா விஜயன், முத்தையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வேளாண் துணை இயக்குனர்கள் முகமது அஸ்லாம், கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயிகள் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்துள்ளது. இருந்த போதிலும் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை உரங்கள் போதுமான அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
பயிர் சேதம்
அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வாணியாற்று பாசன கால்வாய் பகுதிகளில் நன்றாக விளைந்த மரவள்ளி கிழங்கு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே தொடர்மழையால் சேதமடைந்த பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் சேதத்தை அளவீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
இதேபோல் மழையால் வீடுகள் சேதமடைந்தும், மழை பாதிப்பால் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை இழந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பஞ்சப்பள்ளி அணையில் இருந்து 12 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். கால்நடைகளை வாங்கி வளர்க்க வங்கிகளில் வழங்கப்படும் கடன் தொகையை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
கணக்கெடுப்பு பணி
இந்த கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கெடுப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2,77,458 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story