தமிழக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம், அமலாக்கத்துறை விசாரணை
கேரள பெண் தொழில் அதிபர் அளித்த மோசடி புகாரின்பேரில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம், கொச்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பாலக்காடு
கேரள பெண் தொழில் அதிபர் அளித்த மோசடி புகாரின்பேரில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம், கொச்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பண மோசடி புகார்
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் ஷர்மிளா. கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் நகைக்கடை உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் தமிழக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது நெல்லை போலீசில் புகார் மனு அளித்தார்.
அதில், தமிழக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கும், எனக்கும் தொழில் ரீதியாக தொடர்பு இருந்து வந்தது. அவர் என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி அதை திரும்ப தராமல் மோசடி செய்துவிட்டார். பணத்தை திரும்ப கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை விசாரணை
மேலும் இந்த விவகாரத்தில் கணக்கில் வராத பணம் கையாளப்பட்டு இருப்பதாக கொச்சி அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் ஷர்மிளாவை அழைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து சி.விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்ற உத்தரவின்பேரில் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story