அரசு ஆஸ்பத்திரி மீது மரம் முறிந்து விழுந்தது
குன்னூரில் தொடர் மழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி மீது மரம் முறிந்து விழுந்தது.
ஊட்டி
குன்னூரில் தொடர் மழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி மீது மரம் முறிந்து விழுந்தது.
மரம் விழுந்தது
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலையில் குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்துவமனை மேற்கூரை மீது அருகே இருந்த சிறிய மரம் முறிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்ததுடன், கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மழையில் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய நீர்வீழ்ச்சிகள்
ஊட்டி, மஞ்சூரில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்று வருகின்றனர். ஊட்டி நகரில் சில பகுதிகளில் குடியிருப்புகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, மஞ்சூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் கெத்தை சாலையில் ஆங்காங்கே புதிய நீர் வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது. அங்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை அளவு
இந்த நீர்வீழ்ச்சிகளை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் குளிரை போக்க உல்லன் ஆடைகளை அணிந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். மேலும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-6.1, குந்தா-14, அவலாஞ்சி-15, கிண்ணக்கொரை-10, குன்னூர்-18, கேத்தி-23, கோத்தகிரி-21, கோடநாடு-12 என மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story