தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலை


தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 29 Nov 2021 7:42 PM IST (Updated: 29 Nov 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்

கூடலூரில் காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கடும் பனிமூட்டம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதேபோன்று நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் பரவலாக மழை பெய்கிறது. ஆனால் கேரளா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள கூடலூர் பகுதியில் அடிக்கடி சாரல் மழையும், தொடர்ந்து கடும் பனி மூட்டமும் காணப்படுகிறது. 

இதன் காரணமாக போதிய வெயில் இல்லாமல் காலநிலை அடிக்கடி மாறுவதால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. சாரல் மழையும், பனிமூட்டமும் தேயிலை செடியின் காலநிலைக்கு ஏற்றதாக இல்லை. 

நோய் தாக்குதல்

இதனால் பச்சை தேயிலையை வாடல் மற்றும் கொப்புள நோய் தாக்கி கருகி வருகிறது. இதன் காரணமாக தரமான பச்சை தேயிலையை அறுவடை செய்ய முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை முடிவடையும் சூழலில் காலநிலை மாற்றத்தால் பச்சை தேயிலை மகசூல் மட்டுமின்றி பிற விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வீணாகும் நெற்கதிர்கள்

பலத்த மழை பெய்தாலும் அதற்கு இணையாக வெயிலும் காணப்பட வேண்டும். ஆனால் கடந்த சில வாரங்களாக சாரல் மழையும், கடும் பனி மூட்டமும் மட்டுமே காணப்படுகிறது. இதனால் தேயிலை செடிகளை நோய் தாக்கி வருகிறது. 

மேலும் கூடலூர் புத்தூர் வயல், தொரப்பள்ளி, குனில்வயல், பாடந்தொரை மற்றும் முதுமலை ஊராட்சி பகுதிகளில் நெற்கதிர்கள் விளைந்துள்ளது. அதை அறுவடை செய்யவேண்டிய நேரம் நெருங்கி விட்டது. ஆனால் சாரல் மழை, பனிமூட்டத்தால் நெற்கதிர்கள் வீணாகும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story